தருமபுரி: தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் பற்றி குறித்த அமைச்சர்கள் பேசி வரும் கருத்துகள், அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 2ம் தலைநகரங்கள் பற்றிய கருத்துகள் அதிகளவு பேசப்பட்டு வருகின்றன. அமைச்சர்களும் இதுபற்றி கருத்துகளையும், யோசனைகளையும் கூறி வருகின்றனர். வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையை 2 ஆம் தலைநகரமாக்க வேண்டும் என்று கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதே கருத்தை தான் கூறியிருந்தார்.

ஆனால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியை 2ம் தலைநகரமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். அமைச்சர்களின் அடுத்தடுத்த கருத்துகளால் விவாதங்கள் எழுந்தன.

இந் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி கூறி இருப்பதாவது: 2ம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல. அவை அனைத்துமே அவரவர்களின் தனிப்பட்ட கருத்துகள்.   இந்தி 3வது மொழியாக வந்த கோவை பள்ளி விண்ணப்பம் போலியானது என்று கூறினார்.