வேலூர்: இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி  வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிகத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை, மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை கோவை, சேலம் உட்பட 10 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி உள்ளார்.

இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி வேலூருக்கு இன்று காலை 9.25 மணிக்கு வேலூர் சென்றடைந்தார்.

அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, காணொளி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.73.53 கோடி மதிப்பிலான 3 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் 18,589 பயனாளிகளுக்கு ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), மாவட்டக் காவல் கண்காணிப் பாளர்கள், மாவட்ட அளவிலான பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து  விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தினார்.

தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா கொரோனா தொற்று நோயை தடுக்க அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அறிவித்த வழிமுறைகளை 3 மாவட்டத்திலும் கடைப் பிடித்து சிறப்பாக நடவடிக்கை எடுத்ததால் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த 3 மாவட்டத்துக்கும் சிறப்பாக நிர்வாகம் செயல்பட்டதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இறப்பு குறைவாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 822 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 799 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 210 பேரும் பாதிக்கப்பட்டார்கள். தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 71 பேர் ஆகும்.

வேலூரில் 7 ஆயிரத்து 584 பேரும், ராணிப்பேட்டையில் 7 ஆயிரத்து 543 பேரும், திருப்பத்தூரில் 1724 பேரும் குணமடைந்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கப்பட்டு இறந்த வர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 123 பேராகும். இதில் வேலூரில் 120 பேரும், ராணிப்பேட்டையில் 96 பேரும், திருப்பத்தூரில் 44 பேரும் உயிர் இழந்திருக்கிறார்கள். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 356 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது தமிழகம் முழுவதும் 53 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று வரை தமிழகம் முழுவதும் 39 லட்சத்து 13 ஆயிரத்து 523 கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று இருக்கிறது.

காய்ச்சல் முகாம்

கொரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. வேலூரில் 2609 முகாம்களும், ராணிப்பேட்டையில் 3,380 முகாம்களும், திருப்பத்தூரில் 5700 முகாம்களும் நடைபெற்றுள்ளது. இதில் வேலூரில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேரும், ராணிப்பேட்டையில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரும், திருப்பத்தூரில் 1 லட்சத்து 8 ஆயிரம் பேரும் பரிசோதனை செய்யப்பட்டார்கள்.

இதுபோன்று முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை செய்தால் தான் நோயின் அறிகுறி தெரியும். அதனை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் இப்போது பரவல் குறைகிறது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 21 ஆயிரத்து 365 மனுக்கள் வந்தன. இதில் 11 ஆயிரத்து 667 மனுக்கள் ஏற்கப்பட்டன. ராணிப்பேட்டையில் 16 ஆயிரத்து 425 மனுக்கள் பெறப்பட்டு 7 ஆயிரத்து 524 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருப்பத்தூரில் 11 ஆயிரத்து 239 மனுக்கள் பெறப்பட்டு 4 ஆயிரத்து 650 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வீட்டு மனைப்பட்டாவை பொறுத்தவரை வேலூரில் 8,337, ராணிப்பேட்டையில் 3,014, திருப்பத் தூரில் 867 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த குறைதீர்க்கும் முகாமில் அதிக அளவில் முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்கள் வந்தன. தகுதியின் அடிப்படையில் உரியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மகளிர் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அம்மா மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக கடன் வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் வேலூர் மாவட்டத்திற்கு 354 கோடியும், ராணிப்பேட்டைக்கு 297.75 கோடியும், திருப்பத்தூருக்கு 95.42 கோடியும் மகளிர் சுயஉதவிக்குழுக் களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அம்மா 2016–ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அம்மா கொடுத்த வாக்குறுதிகளை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. முதலில் 20 ஆயிரம் ரூபாய் மானியம் என அறிவிக்கப்பட்டு அது 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3082 மகளிரும், ராணிப்பேட்டையில் 3878 பேரும், திருப்பத்தூரில் 3546 பேரும் பயன் பெற்றிருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 ஆயிரத்து 588 பேர் சிகிச்சை பெற்று அரசு செலவில் சிறப்பு ரெயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

வேலூரில் ரூ.16 கோடியில் விளையாட்டு அரங்கம்

வேலூரில் ரூ.16.45 கோடி செலவில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும். பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குடும்பஅட்டை தாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கப்படுகிறது. எனவே மக்கள் இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நேதாஜி காய்கறி மார்க்கெட் மிகவும் நெருக்கடியாக உள்ளது என்று அங்குள்ள வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தார்கள். மார்க்கெட்டுக்காக 35 ஏக்கர் நிலம் சொந்தமாக வாங்கி இருப்ப தாகவும் அதில் மார்க்கெட் கட்டி தரவேண்டும் என்று சங்கத்தினர் கேட்டிருக்கிறார்கள். இது அரசின் பரிசீலனையில் உள்ளது.

648 கோடி செலவில் நதிகள் இணைப்பு

காவிரிபாக்கம் ஏரி 40 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். சோளிங்கர், ஆற்காடு, குடியாத்தம் புறவழிச்சாலைகளுக்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கும். திருப்பத்தூரில் ரூ.18 கோடி செலவில் மகப்பேறு மருத்துவமனை கட்டப்படுகிறது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இரண்டும் புதிதாக துவக்கி வைக்கப்பட்ட மாவட்டங்களாகும். இந்த 2 மாவட்டங்களுக்கும் புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்டப்பட வேண்டும். இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.தென்பெண்ணையாறு – பாலாறு இணைப்பு திட்டம் ரூ.648 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கான பணகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 3 மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு 

கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருந்த போதிலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் தொய்வின்றி செய்து வருகிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு,  மத்திய அரசு சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை தெரிவித்திருக்கிறது. அதனை அரசு நடைமுறைப்படுத்தும். உயர்நீதிமன்றம் தீர்ப்புப்படி அரசு செயல்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

நதிகள் இணைப்பு குறித்த கேள்விக்க, அதுபற்றி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார். கடந்த இரு நாட்களுக்கு முன்புகூட காணொளி காட்சி மூலம் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

தமிழக்ததில் கொரோனா  நோய் தடுப்புக்காக ஒரு நாளைக்கு ரூ.20 கோடி முதல் ரூ.23 கோடி வரை செலவாகிறது. கொரோனா கழிவுகளை அகற்ற ரூ.600 கோடி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. மக்களின் நலன் கருதியே இ–பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-–பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்லாதீர்கள். காய்ச்சல் முகாம்கள் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.

மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தமிழக அரசு கவனமுடன் தளர்வுகளை அறிவித்து வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி, வயதானோர் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு  கூறினார்.