சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சூடான் தலைநகர் கார்டோமில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் சிக்கி தற்போது வரை 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அத்தோடு, சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.