கஜா புயல்: பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! எடப்பாடி அறிவிப்பு

சேலம்:

மிழகத்தில் பேரிழப்பை ஏற்படுத்தி சென்றுள்ள கஜா புயலுக்கு பலர் பலியாலனதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.

இன்று அதிகாலை வேதாரண்யத்தல் கரையை கடந்த கஜா புயல் நாகை மாவட்டத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. மேலும் திருவாரூர், தஞ்சை, காரைக்கால், கடலூர் மாவட்டங் களிலும் பலத்த அழிவை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கை கள் தொடர்பாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் தங்கி முழு நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு  உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

தற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  சேதமடைந்த பகுதிகளுக்கு தான் விரைவில் சென்று பார்வையிட இருப்பதாக கூறிய முதல்வர்,  தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது என்றும், அதிகளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது வரை  கஜா புயலால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியவர், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும்,  படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் புயலின் வேகம் 110 கி.மீ. அளவுக்கு இருந்ததால்,  நாகையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் மத்திய அரசிடம் நிதி கோரப்படும் என்றவர்,  கஜா புயல் பாதிப்புகள் குறித்து விரைவில் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும்,  மக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

வெள்ள சேதம் குறித்து நாம் கேட்கும் நிதியை முழுமையான நிதியை ஒருபோதும் மத்திய அரசு கொடுத்ததில்லை என்றும் என்றும் குற்றம் சாட்டினார்.