சென்னை:

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு வேலூர் அருகே உள்ள சாத்தனூர் அணை உள்பட பல நீர் நிலைகளில்  இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுக்க முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக பொருளாளரும், வேலூர் காட்பாடி திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன், வேலூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் அதிமுக அரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு தண்ணீர் எடுப்பதை தடுப்பேன் என்று  திமுக எம்எல்ஏ துரைமுருகன் அறிவித்திருப்பது தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு தண்ணீர் வழங்கி வரும் ஏரிகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அலையும் பரிதாபம் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்களை வகுத்துள்ள தமிழக அரசு வேலூரில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வரவும் திட்டமிட்டு உள்ளது.

வேலூர் அருகே உள்ள சாத்தனூர் அணை மற்றும் பல நீர் நிலைகளில்  இருந்து தண்ணீர் எடுத்து, அதை சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்கலாம் என தீர்மானித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சென்னையின் நீர் தேவை நாள் ஒன்றுக்கு 800 மில்லியன் லிட்டர் என்றும், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு வேலூரில் இருந்து தினந்தோறும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறியிருந்தார்.

199அடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது சிறிதளவே தண்ணீர் உள்ளது.  இங்கு சேரும் தண்ணீர் வீணாக கடலுக்கே சென்று வருகிறது. இதன் காரணமாக, அணையை தூர் வாரி  ஆழப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமார் 10 முதல் 15 அடி ஆழம் வரை மணல் மேடுகள் உள்ளதாகவும் இதை அகற்றினால், இங்கு மேலும் பல மடங்கு தண்ணீர் சேமிக்க முடியும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால், தமிழக அரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்துக்குள்ளேயே ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் துரைமுருகனின் மனநிலையையும், மக்களின் வாழ்வாரத்தை அரசியலாக்கும் அவரது  மட்டமான அணுகுமுறையையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

துரைமுருகனின் மிரட்டல் குறித்து ஸ்டாலின் இதுவரை ஏதும் கூறாத நிலையில், சமூக வலைதளங்களில்  பலர் திமுக தலைமை மீதும் குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.

தமிழர்களாகிய நாமே ஒருவருக்கு ஒருவர் குடிக்க தண்ணீர்கூட கொடுக்க மறுப்பு தெரிவிக்கும் போது, அண்டை மாநிலங்களான கேரளாவோ, கர்நாடகாவோ, ஆந்திராவோ நமக்கு எப்படி தண்ணீர்  தரும் என எதிர்பார்க்க முடியும்…. ?