சேலம்

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் பகுதியில் புறவழிச்சாலை  மற்றும் பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் ரூ.24 கோடி மதிப்பில் ஒரு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 5.25 கோடியில் இரு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொளசம்பட்டி சாலி, கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால், கரிமேடு சாலை ஆகிய பகுதிகளிலும் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தாரமங்கலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அவர் தனது உரையில், “தொழில்துறை வளர்ச்சி அடைய சாலை வசதி சிறப்பாக இருக்க வேடும். சாலை வசதி சிறக்கச் சாலை உள்கட்டமைப்பு என்பது முக்கியமானதாகும். சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக எந்த மாநிலத்தில் உள்ளதோ அங்குதான் தொழில் வளம் பெருகும். அனைத்து வசதிகளையும் பெற சாலை உள்கட்டமைப்புக்கள் சிறப்பாக இருக்க வேண்டும்.

சேலம் இரும்பு தொழிற்சாலை வளாகத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி ஆலை ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. சென்னை அருகே ரூ.2000 கோடி செலவில் உணவுப் பூங்கா ஒன்றை அரசு அமைக்க உள்ளது.

தமிழக அரசு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இது போல் பல தொழில் வளம் பெருக தேவையான ந்டவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விவசாயிகள் ஒத்துழைப்புடன் குடி மராமத்து பணிகள் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

அதிமுக அரசு விவசாயிகளைக் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. தமிழக பூ உற்பத்தி விவசாயிகள் மாநிலத்திலேயே விற்பனை செய்ய முடியும். இதற்காக விவசாயிகள் குளிர்பதனக் கிடங்கில் ஒரு மாதம் வரை பூக்களை இலவசமாக வைத்திருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.