முக்கொம்பில் ரூ.325 கோடியில் புதிய கதவணை: எடப்பாடி அறிவிப்பு

திருச்சி:

திருச்சி முக்கொம்பில் உள்ள மேலணையின் 9 மதகுகள் வெள்ளப்பெருக்கினால்  உடைந்தன. இதை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக்கொம்பில், ல் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என கூறினார்.

காவிரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாகவும்,  அதிக அளவிலான  வெள்ள நீர் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து, தண்ணீர் வீணானது. தொடக்கத்தில் 4 மதகுகள் மட்டுமே உடைந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொன்றாக உடைந்து மொத்தம் 9 மதகுகள் உடைந்துள்ளது.

தற்போது சீரமைப்பு பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அரசியல் அலட்சியம்,  ஆற்றில் ஆழமான அளவுக்கு மணல் அள்ளுதல் போன்ற காரணங்களால் மதகுகள் பலமின்றி உடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி வந்து சேர்ந்த அவர், முக்கொம்பு அணையின் உடைந்த பகுதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர், அணை சீரமைப்பு பணியை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முக்கொம்பில் உடைந்த அணையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் இன்னும் 4 நாட்களுக்குள் முடிவடையும் என்று கூறினார்.

மேலும், உடைந்த அணைக்கு பதிலாக ரூ.325 கோடி மதிப்பில் புதிதாக கதவணை கட்டப்படும். இதேபோல் கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைக்கப்படும். இந்த கதவணைகளை 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முதல்வருடன் அமைச்சர்கள், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.