மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி,  என்சிபி, காங்கிரஸ் ஆதரவை பெற்றுள்ள நிலையில், 3கட்சிகள் இடையே  குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இன்று மாலை ஆட்சி அமைக்க, மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.

288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இதில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்,  காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.

தேர்தலை கூட்டாக சந்தித்த பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும், உத்தவ் தாக்கரே தனது மகனுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக, அங்கு பாஜக, சிவசேனா உடனான உறவு முறிந்தது. இதனால், பாஜக ஆட்சி அமைக்க முன்வரவில்லை. அதைத்தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், சிவசேனா தரப்பில் , பாஜகவுடனான உறவை முறித்துவிட்டு, ஆட்சி அமைப்பது தொடர்பாக என்சிபி, காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு ஏற்படவே, குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தருவதற்கு காங்கிரஸ்- என்சிபி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து காங்கிரஸுடன் ஆலோசனை நடத்த ஜயந்த் பாட்டீல், அஜித் பவார், சஹன் புஜ்பால், தனஞ்ஜய் முண்டே, நவாப் மாலிக் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது தேசியவாத காங்கிரஸ். மருத்துவமனையில் இருந்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீடு திரும்பினார். அவருடனும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து கூறிய  என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக்,  முதல்வர் பதவிக்கான போட்டியில்,  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனாவின் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது காங்கிரஸ், என்சிபி-யின் பொறுப்பு. அதனால் அந்த கட்சிக்கு முதல்வர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், மூன்று கட்சிகளும் தலா 14 அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது என்கிற யோசனைக்கு பதில் சிவசேனாவுக்கு மட்டும் 16 அமைச்சர்கள்; காங்கிரஸ்- என்சிபிக்கு தலா 14 அமைச்சர் பதவிகளை ஒதுக்கலாம் என்று சிவசேனா கூறியதாகவும் தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, காங், சிவசேனா, என்சிபி -ன் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, இன்று மாலை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க, மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து உரிமை கேர உள்ளன.

இதற்கிடையில்,  ஹோட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு திரும்ப உத்தவ் தாக்ரே  உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.