முதல்வர் விரைவில் குணமடைவார்: சரத்குமார்

சென்னை,

முதல்வர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சரத்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து மூத்த அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். மீண்டும் ஒரு வாரத்துக்கு முன்பு சென்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன்.

முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஆனால், சிலர் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் தமிழக அரசு இயந்திரம் இயங்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல உள்ளது. உடல் நலம் பாதிக்கப்படுவது அனைவருக்கும் இயல்பானது.

தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்“ என்று சரத்குமார் கூறியுள்ளார்.