ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றுங்கள் – பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வாகன விற்பனை வீழ்ச்சியடைந்ததால், ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கான நபர்கள் வேலையிழந்து வருகின்றனர். எனவே, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுத்தும் வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தற்போதைய நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல கட்டாய விடுமுறைகளை அறிவித்துள்ளன. இந்திய அளவில் தமிழகம் ஆட்டோமொபைல் தொழில்துறையில் வளர்சசி பெற்று திகழும் மாநிலம். நாட்டின் மொத்த ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 27% என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆட்டோ உதிரிபாக உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 35%. ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழக பங்களிப்பு 45%. எனவே, அத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவானது, பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சரிசெய்யும் வகையில், தேவையான உதவி நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர். மேலும், சில்லறை ஆட்டோ கடன்களை பிரித்து வழங்கும் செயல்பாட்டை விரைவுபடுத்தும் வகையில், வணிக வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளையும் நாடியுள்ளார் முதல்வர்.