புதுச்சேரி

னைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் கூறி உள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் நாடெங்கும் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.   இதையொட்டி முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்னணி சுகாதார ஊழியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. அதற்கான பட்டியல் தயாராக உள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இரு நிறுவனங்களும் விநியோகங்களைத் தொடங்கி உள்ளன.  சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசிக்கு கோவிஷீல்ட் எனவும் பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசிக்கு கோவாக்சின் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்குப் புதுச்சேரி முதல்வர் வி நாரயணாசாமி, “நான் பிரதமர் மோடிக்கு அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முதல் கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என வேண்டுகோள் விடுக்க உள்ளேன்

இவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் மக்களிடையே உள்ள அச்சம் நீங்கி அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மீது ஒரு நம்பிக்கை வரும்.  இதன் மூலம் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருவார்கள்” என தெரிவித்துள்ளார்.   முதல்வரின் இந்த வேண்டுகோள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.