புனே: கூட்டுறவு வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி அறிவித்திருக்கிறது.

மகாராஷ்ரா சட்டசபை தேர்தல் அண்மையில் முடிந்தது. பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தேர்தலில், ஸ்டார் வேட்பாளரான பங்கஜா முண்டேவை தோற்கடித்து அனைவரையும் கவர்ந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ தனஞ்செய் முண்டே. இவர், பங்கஜா முண்டேவின் நெருங்கிய உறவினரும் கூட.

தேர்தலில் வெற்றி பெற்றாலும், வேறொரு ரூபத்தில் அவருக்கு சிக்கல் முளைத்திருக்கிறது. அதாவது வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வில்லை என்று.

புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் அவர் கடன் பெற்றிருக்கிறார். ஆனால் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து, சிவாஜிநகரில் உள்ள அவரது குடியிருப்பை கையகப்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதுவும் தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளே, அனைத்து நாளிதழ்களிலும் இந்த விவரத்தை அறிவிப்பு வாயிலாக வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கி அதிகாரிகள், ஒருவர் கடன் வாங்கிவிட்டு செலுத்தாத பட்சத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது தொடர்பான விவரங்கள் கலெக்டருக்கு அனுப்பப்படும். அதன் பிறகு சொத்துகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறியிருக்கின்றனர்.