உயர்நீதி மன்றம் அனுமதி: நாளை வெளியாகிறது கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள்

சென்னை:

மிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் முடிவுகளை அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து நாளை கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலில் தில்லுமுல்லு நடைபெறுவதாக கூறி பல இடங்களில் அரசியல் கட்சியினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில்,  தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதி மன்றம் வரை சென்றது.  உயர்நீதி மன்றம் விதித்த தடையை எதிர்த்து, கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவு அறிவிக்கக் கூடாது, இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்து ஜூலை மாதத்திற்குள் தீர்ப்பு கூற வேண்டும் என்று  உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று நேற்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து  கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்க தேர்தல் ஆணையம்  வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையை அனுசரித்து 18 ஆயிரத்து 775 கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

முதல் அடுக்கில் வரும் 18 ஆயிரத்து 465 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதற்கட்டத்தில் 12.3.2018 முதல் 07.5.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டின் மதுரை கிளையின் உத்தரவின்படி அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், ஐகோர்ட்டின் இடைக்கால தடையை விலக்கி உத்தரவிடப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் ஆகியவை தவிர மற்ற அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதனடிப்படையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ஆணையம் மீண்டும் தொடர்ந்து நடத்தி முடித்தது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஐகோர்ட்டுக்கு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு திரும்ப அனுப்பியது. நிறுத்தப்பட்டி ருந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகியவற்றின் மீதான தடையை விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று ஐகோர்ட்டு ஆணையிட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே, புகார்கள் அல்லது சட்ட ஒழுங்கு மற்றும் வேறு காரணங்களினால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலோ, ரத்து செய்யப்பட்டு இருந்தாலோ, தள்ளி வைக்கப்பட்டிருந்தாலோ, பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தாலோ, அந்த சங்கங்கள் தவிர மற்ற அனைத்து சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடனே அறிவிக்க அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நாளை (2-ந்தேதி) 2-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 3-ம், 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படும். 3 மற்றும் 4-ம் நிலுவையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் 6-ந்தேதி அன்று நடத்தப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப்பட்ட, தள்ளி வைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள், நிறுத்தப்பட்ட நிலையிலிருந்து தொடர ஆணையிடப்பட்டுள்ள சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப் படும். ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு ஓட்டு எண்ணிக்கையோ, தேர்தல் முடிவை அறிவிக்கவோ கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.