நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் திலீப் ரேவுக்கு ஆயுள் தண்டனை வழங்க மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை

புதுடெல்லி:
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு மத்திய புலனாய்வுத்துறை டெல்லி நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த மாதம் 26-ஆம் தேதி அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த உத்தரவை விரிவான பதிவாக நீதிமன்றம் வெளியிடும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போது ஒரு உணவகத்தை நடத்தி வரும் முன்னாள் அமைச்சரான திலீப் ரே, அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மாநில நிலக்கரி அமைச்சராக இருந்தார். 1999-ஆம் ஆண்டு நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார்.

அப்போது நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டிருந்த இவரது வழக்கு அக்டோபர் 6-ஆம் தேதி சிறப்பு நீதிபதி பரத் பராசர் தலைமையில் விசாரிக்கப்பட்டு திலிப் ரே உள்ளிட்ட அனைவரையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பளித்த பின்னர் குற்றவாளிகள் தங்களுடைய வயதை காரணம் காட்டி குறைவான தண்டனையை வேண்டியுள்ளனர், ஆனால் இதில் தலையிட்ட மத்திய புலனாய்வுத்துறை அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் 51 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தனியார் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக அரசு தரப்பு வாதிட்டது.

மேலும் இந்த வழக்கில் திலீப் ரேவைத்தவிர நிலக்கரி அமைச்சகத்தின் இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகள், அப்போது கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப்குமார் பானர்ஜி மற்றும் காஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் லிமிடெட் முன்னாள் ஆலோசகர் நித்திய நந்த் கௌதம் இயக்குனர் மஹேந்திர குமார் அகர்வால் ஆகியோர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.