திருவனந்தபுரம்

ட்சத்தீவுகள் அருகே உள்ள கடற்கரைப்பகுதியில் 3 இலங்கைப் படகுகளைப் போதை மருந்துகளுடன் கடற்கரை காவல் படையினர் பிடித்துள்ளனர்.

பெரும்பாலான போதை மருந்து கடத்தல்காரர்கள் இலங்கை வழியாக போதை மருந்துகள் கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  அவ்வகையில் லட்சத்தீவுகள் அருகே உள்ள கடற்கரைப்பகுதியில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.  அதையொட்டி அந்த பகுதியில் கடற்கரை காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லட்சத்தீவுகள் பகுதியில் இருந்து 400 கடல் மைல்கள் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பாகிஸ்தான் கப்பலில் இருந்து போதை மருந்துகளை 3 படகுகளில் கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்தது.  அதையொட்டி தயாராக இருந்த கடற்கரைக் காவல்; படையினர் அந்த மூன்று படகுகளையும் வளைத்துப் பிடித்துள்ளனர்.  அவை இலங்கையைச் சேர்ந்த படகுகள் ஆகும்/

இந்த மூன்று படகுகளில் மொத்தம் 19 பணியாளர்கள் இருந்துள்ளனர்.  அவர்களிடம் காவல் படையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.   இந்த படகுகளில் ஹீராயின் மற்றும் ஹஷிஷ் போன்ற போதை மருந்துகள் இருந்துள்ளன.   இவை அனைத்தும் அழகாக பாலிதின் பைகளில் பாக் செய்யப்பட்டு கப்பலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த படகுகளில் இருந்தவர்கள் தப்ப முயன்றதாகவும் ஆனால் காவல் படையினர் வேகமாக வந்து சுற்று வளைத்ததால் தப்ப முடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.  இவர்கள் ரோந்துப் படையினரிடம் சிக்கும் போது கடலில் போதை மருந்துகளைத் தள்ளி விட்டு விட்டு அதன்பிறகு ஒரு செயற்கைக் கோள் கருவி மூலம் அதை மீண்டும் கண்டுபிடித்து எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கப்பலில் வந்தவர்கள் அந்த கருவியைக் கடலில் போட்டுள்ளனர்.  மேலும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.  படகுகள் மற்றும் அதில் இருந்தோர் அனைவரும் தற்போது விழிஞ்சம் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  இங்கு இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த உள்ளதாக காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.