ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்த நிறுவனம் பாஜகவுக்கு ரூ.20 கோடி நன்கொடை : அம்பலப்படுத்திய கோப்ரா போஸ்ட் 

புதுடெல்லி:

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் ப்ரமோட்டர்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்துக்கு பொதுத் துறை வங்கிகள் ரூ1 லட்சம் கோடி கடன் கொடுத்ததில் மெகா முறைகேடு நடந்திருப்பதாக கோப்ரா போஸ்ட் இணையம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.

டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு தூதுவராக இந்தி நடிகர் ஷாருக்கான் பொறுப்பேற்ற நிகழ்வு.

பல்வேறு வங்கிகளிலிருந்து கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் கோப்ராபோஸ்ட் என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியின் விவரம் வருமாறு:

இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய நிதி முறைகேட்டை டிஹெச்எஃப்எல் நடத்தியுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே செயல்படுவதாகக் கூறி போலியான நிறுவனங்களின் பெயரில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ1 லட்சம் கோடி வரை இந்த நிறுவனம் கடனாகப் பெற்றுள்ளது.

இந்த தொகையை திரும்பப் பெறமுடியாத நிலையில் வங்கிகள் இருப்பதால், மக்களின் பணம் சூறையாடப்பட்டிருக்கிறது.

எந்தவொரு நிறுவனத்துக்கும் கடன் வழங்கும்போது, சொத்து உத்தரவாதம் மட்டுமின்றி கடன் பெறும் நிறுவனங்களிடம் தனிப்பட்ட உத்தரவாதமும் பெறவேண்டும் என்பது விதிமுறை.

எனவே, ரூ.1 லட்சம் கோடி கடனை டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் போலி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வாய்ப்பே இல்லை.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், டிஹெச்எஃப்எல் கட்டுமான நிதி நிறுவனம் பாரதீய ஜனதா கட்சிக்கு ரூ.19.6 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆர்கே டெவலப்பர்ஸ், பாஜகவுக்கு ரூ.9.93 கோடி நன்கொடை கொடுத்துள்ளது.

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்கள் மெகுல் சோக்ஸி மற்று நீரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து பெற்ற ரூ.5 ஆயிரம் கோடியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இவர்கள் தப்பியதில் மோடிக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது.

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி போல், இவர்களும் வெளிநாட்டுக்கு தப்பிக்கும் முன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கோப்ரா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.