உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இதனால் மார்ச் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘காக்டெய்ல்’ படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா, தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.

“மனித இனம்‌ மகிழ்ந்திருக்க உருவாக்கப்பட்டதே கலை. அக்கலை, மனிதர்களின்‌ நலம்‌, வளம்‌ சார்ந்தே வரவேற்கப்படுகிறது. மனிதன்‌ தன்‌ மகிழ்வான பொழுதுகளை அமைத்துக்‌கொள்ள ஆரோக்கியமான உடல்‌ நலமுடன்‌ இருப்பது முக்கியம்‌. தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது மிகப்‌ பயங்கர தொற்று நோயான கரோனா வைரஸ்‌. பாதிக்கப்பட்ட அநேகரை நினைத்து கவலை கொள்கிறது ’காக்டெய்ல்’ படக்குழு.

இன்னமும்‌ இந்நோய்‌ பரவும்‌ அபாயம்‌ இருப்பதால்‌ பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நமது தமிழக அரசும்‌ வரும்‌ முன்‌ காக்கும்‌ நடவடிக்கைகளை மிகத்‌ துரிதமாகச்‌ செய்து வருகிறது. நன்றி!

மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ எல்லா இடங்களையும்‌ அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதில்‌ திரையரங்குகளும்‌ அடங்கும்‌. ’காக்டெய்ல்’ படக்குழு மக்கள்‌ நலனில்‌ மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எங்கள்‌ ‘காக்டெய்ல்’ படம்‌ வருகின்ற 20- ம்‌ தேதி திரைக்கு வரவிருந்தது.

தற்போது திரையரங்குகள்‌ மூடப்படுவதால்‌ எங்கள்‌ திரைப்படம்‌ வெளியாவதில்‌ சிக்கல்‌ ஏற்பட்டுள்ளது. பட வெளியீட்டை நோக்கி விளம்பரம்‌ திரையரங்குகளுக்கான முதலீடுகள்‌ என நிறையப் பணம்‌ செலவு செய்துள்ளோம்‌.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ படம்‌ வெளியாக முடியாததால்‌ அதிக இழப்பைச்‌ சந்திக்க நேர்ந்துள்ளது. நாடே பேரிடர்‌ நோக்கி நிற்பதால்‌, இவ்விழப்பை நாங்கள்‌ கணக்கில்‌ கொள்வது முறையல்ல. எப்போது வெளியானாலும்‌ எங்கள்‌ ‘காக்டெய்ல்‌’ படம்‌ மக்கள்‌ மனதில்‌ இடம்‌ பிடிக்கும்‌ என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால்‌, அதற்கு ஈடாக, நிலைமை சீராகி மீண்டும்‌ திரையரங்குகளில்‌ இயல்பு நிலை திரும்பும்போது இந்த வாரம்‌ வெளியாகாமல்‌ நின்று போன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடச்‌ செய்ய வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

அச்சமயம்‌ பெரிய படங்களோ, கூடுதல்‌ படங்களோ வெளியாகி விடாமல்‌ ஒழுங்குபடுத்தித்‌ தருவதோடு எங்கள்‌ படங்களுக்குத்‌ தேவையான நல்ல திரையரங்குகளை ஒதுக்கித்‌ தர வேண்டும்‌.

அதுவே எங்களது இழப்பைச்‌ சரி செய்ய நீங்கள்‌ செய்யும்‌ பேருதவியாக இருக்கும்‌. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌ தமிழக அரசும்‌ இதைக்‌ கருத்தில்‌ கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

’நிலை மாறும்‌ உலகில்’ இன்றைய இந்த அபாயகரமான நிலை விரைவில்‌ மாற வேண்டிக்‌ கொள்கிறேன்‌. சினிமா தொழிலாளர்கள்‌, பொதுமக்கள்‌ தங்கள்‌ குழந்தைகளைப்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ளும்படி கேட்டுக்‌ கொள்கிறேன்‌. மக்கள்‌ நலனில்‌ அக்கறையுடன்‌ மீண்டும்‌ ஒரு தேதிக்காகக் காத்திருக்கிறோம்‌”.