கோயமுத்தூர்: கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்நிறுவனத்தின் மேலாளர்களை கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,43,945 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 9362 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 6682 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 2484 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 196 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த ஜூவல்லரி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. தொடர்ந்து, கடையில் பணியாற்றிய 90 உழியர்களுக்கும் சோதனை நடத்தப்ட்டது. இதில்,  51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள்  அனைவரும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை, இவர். எஸ். ஐ. மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்டு கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக சுகாதாரத்துறை புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கல்யாண்  ஜூவல்லரியின் மேலாளர்களான விஜயகுமார் மற்றும் விபின் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும்,  கல்யாண் ஜூவல்லரிக்கு  சென்று வந்தவர்கள்  அனைவரும் அரசு மருத்துவமனையிலோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ சென்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.