கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வியாபாரிகளுக்கு பாதிப்பு, எம்ஜிஆர் மார்க்கெட் மூடல்

கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவ மிக முக்கிய காரணமாக இருந்தது கோயம்பேடு மார்க்கெட். அதன் வாயிலாக பிற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந் நிலையில், கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டில் பணிபுரியும் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாயிபாபா கோயில் அருகே உள்ள அந்த காய்கனி மார்க்கெட்டில் 274 பேருக்கு சளி மாதிரி சோதிக்கப்பட்டதில் 3 பேருக்குத் தொற்று உறுதியானது. மேலும் 200 பேருக்கு இதையடுத்து ஒரு வார காலமாக அந்த மார்க்கெட்டுக்கு வந்து சென்றவர்கள் தாங்களே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. தொற்று காரணமாக அந்த மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் வெளியூரிலிருந்து யாராவது வந்தால் உடனே மாநகராட்சிக்குத் தகவல் தர வேண்டும் என்று கோவை மாநகரின் ஒவ்வொரு வீதியிலும் ஆட்டோ, வேன் மூலம் அறிவிக்கப்படுகிறது. வீடு வீடாக வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள், உங்கள் வீட்டில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் உண்டா? என்று விசாரித்து அதனை பதிவு செய்து வருகின்றனர்.