பிரபல வணிக நிறுவனத்தை கைப்பற்றியது : கோவையில் 29 ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் !!

புதுடெல்லி:

கோவையைச் சேர்ந்த சில்லறை வணிக நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பங்குகளை வாங்குவதன் மூலம் தென் மாநிலத்தில் தனது நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் (எஸ்.கே.டி.எஸ்) 100% பங்குகளை தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவனம் ரூ .152 கோடிக்கு வாங்கியுள்ளது என்று தேசிய பங்குசந்தை ஒழுங்குமுறை குழுவில் மனு செய்துள்ளது.

1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எஸ்.கே.டி.எஸ் தற்போது கோவை, ஈரோடு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் 29 மளிகைக் கடைகளை நடத்தி வருகிறது, இதன் ஆண்டு வருமானம் ரூ. 415 கோடி.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது சில்லறை விற்பனை வணிகத்தை மேலும் வலுப்படுத்தியிருப்பதோடு, அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க தங்களது இந்த கடைகளையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் இணைக்கும் மற்றுமொரு புதிய வர்த்தக முயற்சி என்றும், இதனால் சிறுவிவசாயிகள் முதல் பெறுவணிகர்கள் வரை அனைவரையும் இணைக்கமுடியும் என்றும் தெரிவித்திருக்கிறது.

 

ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் கடைகளை அதே பெயரில் தொடர்ந்து நடத்துவதா அல்லது ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களாக மாற்றுவதா என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

எஸ்.கே.டி.எஸ். பங்குகளை தற்போது வாங்கியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் நாடுமுழுக்க ரிலையன்ஸ் ஃப்ரெஷ் மற்றும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் என்ற பெயரில் 700 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை வைத்திருக்கிறது. இந்நிறுவனம், ஏற்கனவே 2018 ம் ஆண்டில் இந்தியாவில் பர்பெரி, ஜார்ஜியோ அர்மானி, ஜிம்மி ச்சூ மற்றும் கனாலி போன்ற பிராண்டுகளை விற்கும் ஜினிசிஸ் லக்சுரி நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.