மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு : கரும்புச் சக்கை விநாயகர் சிலை
கோயம்புத்தூர்
சுற்றுச் சூழலை பராமரிக்க கோவை மாணவர்கள் கரும்புச் சக்கையைக் கொண்டு விநாயகர் சிலை தயாரித்துள்ளனர்.
இந்த மாதம் விநாயக சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது விநாயகர் சிலைகள் பூஜிக்கப்பட்டு அதன் பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். பிரம்மாண்டமான பல விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்டு ரசாயன வண்ணம் பூசப்படுவதால் நீர் நிலைகள் மாசு படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள்ன. இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர்.
கோயம்புத்தூரில் உள்ள சரவணம்பட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் ‘ரே’ என்னும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகின்றனர். அவர்கள் இந்த சுற்றுச் சூழல் பராமரிப்புக்கு பெரிதும் முக்கியம் தரும் பல கண்டுபிடிப்புக்கள் குறிந்து ஆய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஆய்வு நடத்துகையில் விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் க்கு பதில் கரும்பு சக்கையில் ஸ்டார்ச் சேர்த்து தயாரிக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். அந்த முறையில் விநாயகர் சிலைகளை பெருமளவில் செய்துள்ளனர். விரைவில் இந்த சிலைகள் மக்களை சென்றடையும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சியில் ஈடுபட்ட 30 மாணவர்கள் இவ்வாறு கரும்புச் சக்கையில் செய்யப்படும் விநாயகர் சிலைகள் முழுமையாக நீரில் கரைந்து மீன்களுக்கு உணவாகும் எனவும் நீர் நிலைகள் மாசுபடுவது குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.