தமிழகத்தில் தடை!: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு!

டில்லி:

மிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்தது குறித்து இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து முறையிட்டார் பெப்சி நிறுவன சி.இ.ஓ. இந்திரா நூயி.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போராடினர். இதன் காரணமாக, தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

நூயி – ஜெட்லி

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்புலமாக அந்நியநாட்டு குளிர்பாணங்கள் இருப்பதாகவும், தமிழகத்தின் நீராதாரத்தை இந்த நிறுவனங்கள் உறிஞ்சுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.  தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, வரும் மார்ச் 1ம தேதி முதல் தமிழக கடைகளில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்று அறிவித்தார். மேலும், பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கங்கங்களும் இதே அறிவிப்பை வெளியிட்டன.

மேலும் பொதுமக்களே இந்த குளிர்பாணங்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் விற்பனை குறைந்தது.

இந்த நிலையில், வர்த்தக சங்கங்கள் அறிவித்தபடி இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பாணங்கள் தடை செய்யப்படுவதாக  வியாபாரிகள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

மேலும், “ ஏற்கெனவே,எங்களது அறிவிப்பால் தற்போது தமிழகத்தில் அந்நியநாட்டு குளிர்பாணங்களின் விற்பனை 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. தவிர, அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்ற அறிவிப்பு கடைகளில் வைக்கப்படும். கடைகளில் உள்ள இந்த வகை குளிர்பாணங்களை திரும்ப எடுத்துக்கொள்ளும்படி அந் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதே கருத்தை வெள்ளையன் தரப்பினரும் தெரிவித்தனர்.    பெரும்பாலான கடைக்காரர்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி, இன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தங்கள் நிறுவன குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்துள்ளது குறித்து முறையிட்டார்.

இதற்கு அருண்ஜெட்லி, விரைவில் நிலைமையை சரி செய்வதாக கூறியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.