ழத்தமிழர்கள் அமெரிக்காவுக்கே கப்பல் விட்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை. அதுவும் 1930களிலேயே!

அந்த காலகட்டத்தில்,  வல்வெட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து வந்தனர். கொச்சின், ரங்கூன் முதல் அரபு நாடுகள் வரை அவர்களின் பாய்மரக்கப்பல்கள் சென்று வந்தன

அப்போது,  வல்வெட்டி துறையை சேர்ந்த சுந்தர மேஸ்திரியார் என்வர் கப்பல் கட்டுவதில் தேர்ந்தவராக இருந்திருக்கிறார்.  இவரால் 1930ம் ஆண்டு கட்டப்பட்டது  தான் இந்த அன்னபூரணி அம்பாள் கப்பல்.

இக்கப்பல் இந்தியாவின் கரையொர நகரங்களுக்கும்  பர்மா, பாகிஸ்தான், இந்தோணேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது.

அந்த சமயத்தில் ஈழத்து பகுதிக்கு வந்தார் ரோபின்சன் என்ற அமெரிக்கர். பெரும் செல்வந்தரான இவர், தனது சிறு கப்பலில் உலகை வலம் வந்தார். பிரபல நாவலாசிரியரும், ஆராச்சியாளரும், கடலோடியுமாவார்.

அவர் அன்னபூரணியை கப்பலை பார்க்க நேர்ந்தது. அக்கப்பலின் பாய்மரக்கப்பலின் அழகிய அமைப்பையும் அதன் உறுதியையும் எந்த நீரோட்டத்திலும் இலகுவாகப் பயணம் செய்யும் தன்மையையும் கண்ட ரோபின்சன் இதை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றால் அது காட்சிப் பொருளாக வைக்கலாம், பலரும் கண்டுகளிப்பார்கள் என்று நினைத்தார்.

இதையடுத்து  1936ம் ஆண்டு அன்னபூரணியை விலை கொடுத்து வாங்கினார்.

அதை அமெரிக்காவின் பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஐந்து தமிழ் மாலுமிகளுக்கு வழங்கபட்டது.

கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் கிளம்பிய அக்கப்பல் மாலுமிகள் யாருமே அதற்கு முன் அமெரிக்காவை கண்டதில்லை. சூயஸ் கால்வாய் வழியாக சென்று ஐரோப்பா வழியே அமெரிக்கா செல்லவேண்டிய நெடும் பயணம்.

கொலம்பஸின் கடல்பயணத்தை மிஞ்சிய தூரம்.

கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்தனர்.

இவர்களோ வெறும் ஐந்தே பேர்.

பெரும் கடற்சீற்றங்களையும் இதர தடைகளையும் தாண்டி பாஸ்டன் துறைமுகத்துக்கு மூன்று மாதத்தில் கப்பலை கொண்டு சென்றுவிட்டனர் இவர்கள்.

சட்டை அணியாமல் திருநீறு, குடுமியுடன் கூடிய ஐந்து பேர் பாஸ்டன் துறைமுகத்தில்பாய்மரக் கப்பலில் இறங்கிய காட்சியை காண பாஸ்டன் நகரமே கூடியது.

அதன்பின் அந்த ஐந்து மாலுமிகளும் பாஸ்டனில் தங்கிவிட்டதாக தெரிகிறது.

இந்த கப்பல் குறித்து, 1938 ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிய அமெரிக்க தினசரியான போஸ்ரன் குளோப் பத்திரிகையில்  முதல் பக்கத்தில் பரபரப்பாக செய்தி வெளியானது.

அந்த அளவுக்க கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் ஈழத்து மக்கள்.