சென்னை:  அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், தனிநபர்களிடமிருந்து ரூ.3.48 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சுமார் 90 சதவிகித தளர்வுகளுடன் கொரோனா பொதுமுடக்கம் ஜனவரி 31ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்பட கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், கடைகளிலும் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், பல இடங்களில் பொதுமக்கள் முக்கவசம் அணிவதை தவிர்த்து வருவதுடன், கூட்டமாக கூடும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

பொதுஇடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காத   வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் இருந்து கடந்த   8.1.2021  வரை மொத்தம் ரூ.3.48 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.