நான் மீண்டும் கபடி விளையாட வேண்டும் சார் என கண்கலங்கிய மாணவிக்கு உதவுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் காட்டூர் வீதியைச் சேர்ந்த செல்வன் – அன்னக்கொடி தம்பதியரின் மகள் சந்தியா (22). சந்தியாவுக்கு, நரேந்திரன் என்றொரு சகோதரர் இருக்கிறார். கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்து வந்த பெற்றோர்கள், எப்படியாவது பிள்ளைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கிவிட வேண்டும் என ஆசைப்பட்டனர். பெற்றோர்களின் விருப்பப்படி நன்கு படித்த சந்தியா 10ம் வகுப்பில் 305 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 946 மதிப்பெண்ணும் பெற்றிருக்கிறார். படிப்பில் திறமையான சந்தியா, கபடி விளையாட்டிலும் மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறார். மேற்படிப்பு படித்து போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் அவரின் நீண்ட நாள் கனவு. ஆனால், அந்தக் கனவு, ஒரு விபத்தின் காரணமாக சிதைந்துப்போய் விட்டது.

2016ம் ஆண்டு, 12ம் வகுப்பை முடித்த சந்தியா மேல் படிப்புக்காகக் காத்திருந்த நேரம், அந்தியூரில் உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது எதிரே வந்த டெம்போ வேன் ஒன்று சந்தியாவின் மீது கடுமையாக மோதி, தூக்கி வீசியிருக்கிறது. பலத்த ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்தியா, கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். ஈரோடு, கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் மாறி மாறி சிகிச்சை பெற்றுவந்த சந்தியா, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சுயநினைவு பெற்றிருக்கிறார். ஆனால் அவரால் நடக்கவோ, வேலைகளை சுயமாக செய்யவோ முடியாத நிலை தொடர்கிறது. ஒரு வார்த்தையை பேசி முடிக்க கூட நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில் சந்தியா இருக்கிறார்.

இந்நிலையில் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சந்தியா வருகை தந்தார். அவரை பார்த்த மாவட்ட ஆட்சியர், அவரது பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய சந்தியா, “நான் நல்லா கபடி விளையாடுவேன் சார். படிப்புலயும் நல்ல மார்க் எடுத்திருக்கேன். எனக்கு நல்லா படிச்சு போலீஸ் ஆகணும்னு ஆசை. என் உடல்நிலை தேறி நான் நல்லா வந்துடுவேன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. என்னால என் அம்மா, அப்பா ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு நீங்க கொஞ்சம் உதவி செய்யுங்க சார். நான் மேல படிக்கணும், மறுபடியும் கபடி விளையாடணும், நான் போலீஸ் அதிகாரியா ஆகணும்” என்று தெரிவித்து கண்கலங்கினார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், “நிச்சயமாக நீங்கள் பழைய வேகத்துடன் கபடி விளையாடுவீர்கள். நம்பிக்கையை ஒருபோதும் கைவிட வேண்டாம். உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய உத்தரவிடுகிறேன். என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் நான் செய்கிறேன்” என்று தெரிவித்தார்.