இந்தூர்: மத்தியப் பிரதேச மாநில உமாரியா மாவட்டத்தின் கலெக்டர், ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் 100 குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பதற்காக, தனது அலுவலத்திலுள்ள குளிர்சாதன இயந்திரத்தை அகற்றியுள்ளார்.

கலெக்டரின் இந்த முன்முயற்சியைத் தொடர்ந்து, அக்குழந்தைகளின் சிகிச்சைக்காக மக்கள் நன்கொடை அளிக்கத் தொடங்கியதால், கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.5 லட்சம் சேர்ந்துள்ளது.

உமாரியா மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை கடந்த ஒரு வாரமாக 45 முதல் 46 டிகிரி செல்சியஸ் என்பதாக இருக்கிறது. இப்பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 100 பழங்குடியின குழந்தைகள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைகளில், 90% பேருக்கு இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி சூடு போடப்பட்டுள்ளது. ஏனெனில், அப்படி சூடு போட்டால், ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சினையிலிருந்து அக்குழந்தைகள் குணமாகிவிடுவார்கள் என்ற பழங்குடிகளின் மூடநம்பிக்கையே அதற்கு காரணம்.

எனவே, ஏற்கனவே வாட்டிவரும் கொடும் வெயிலில், இப்படி நெருப்புக் காயங்களுடனும் குழந்தைகள் அவதிப்படும் நிலையில், குளிர்சாதனங்கள் இன்னும் வெப்பத்தை அதிகரிக்கும். எனவேதான், முதல் முன்முயற்சியாக தனது அலுவலகத்திலுள்ள குளிர்சாதன இயந்திரத்தையே அகற்றியுள்ளார் அந்த கலெக்டர். அவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.