தனிமைப்படுத்தல் இடங்களாக மாறுகின்ற கல்லூரி விடுதிகள் & ஹோட்டல்கள்..!

சென்னை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த மாநிலம் திரும்பும் தமிழர்களை, கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தி தங்கவைக்கும் ஏற்பாடு அரசின் சார்பில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, பணம் செலுத்த தயாராக இருக்கும் நபர்களுக்காக, ஹோட்டல் அறைகளை தனிமைப்படுத்தும் இடங்களாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்த ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களில், வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்திறங்கிய விமானங்கள், சுமார் 1000 பயணிகளைக் கொண்டுவந்து ச‍ேர்த்தன. அவர்களில் பலர் இலவச தனிமைப்படுத்தும் இடங்களிலேயே தங்கவைக்கப்பட்ட நிலையில், சிலர் கட்டண அறைகளை நாடினர்.

புதுடெல்லி – சென்னை ராஜ்தானி ரயிலில் தமிழகம் வந்த பயணிகளில் பலர், 2 ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனிவரும் நாட்களில் தமிழகம் வரவுள்ள பலரையும் கையாளும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.