ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்: மீண்டும் பதற்றத்தில் தூத்துக்குடி

தூத்துக்குடி:

மூடப்பபட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக  இன்று தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டம் குதித்துள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இதற்கிடையில், தீபா அமைப்பினர் சார்பில் வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டமும் நடைபெற்று வருகிறது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய மக்கள் போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலில் 13 பேர் உயரிழந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து ஆலையை மூடுவதாக தமிழகஅரசு அறிவித்து சீல் வைத்தது. ஆனால், தமிழகஅரசின் நடவடிக்கையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.  வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இது தூத்துக்குடி மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஸ்டெர்லைட்  ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவ தாக தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி உள்பட அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தீபா பேரவையினர் போராட்டம்

தூத்துக்குடிக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார்  சோதனைச்சாவடிகளை அமைத்து வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள லாட்ஜ் கள் அனைத்துக்கும் புதிதாக தங்குபவர்கள் குறித்து தெரிவிக்க காவல் துறையினர் உத்தரவட்டு உள்ளனர். ஸ்டெர்லைட்டை சுற்றி உள்ள கிராமங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீண்டும்  பதற்றமும் பரபரப்பு நிலவி வருகிறது. தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவல‌கத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேவேளையில்,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தீபா பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.