‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’! உயர்நீதிமன்றம்..

மதுரை:  பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, பொறியியல் கல்விகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’ என்று தெரிவித்தது. மேலும்,   இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளையும்   எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்விநிலையங்கள் மூடப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,   தமிழகத்தில் உள்ள தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  கொரோனா காலத்தில்  உரிய முறையில் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளதா?   என்பதை  உறுதி செய்ய வேண்டும்.  அதுவரை  தமிழ்நாட்டில்  நடப்பாண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கான,  கலந்தாய்வை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான  கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால்,  தனியார் கல்லூரி ஆசிரியர்கள பல மாதங்களாக ஊதியம் இல்லாத நிலை உள்ளது. பல  கல்லூரி ஆசிரியர்கள் பலர் பிரியாணி கடைகளிலும்,  ஓட்டல்களிலும் பல்வேறு வேலைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

அதையடுத்து பேசிய நீதிபதிகள்,  தமிழகத்தில் தேவைக்கு அதிகமான புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன .  இதற்கு யார் காரணம்? யார் அனுமதி வழங்கியது? AICTE. தான் காரணமா? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், தற்போதுள்ள பொறியியல்  கல்லூரிகள்  பொறியாளர்கள் உருவாக்குவதில்லை? பொறியியல்  பட்டதாரிகளை தான் உருவாக்கின்றனர். அதனால்தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கல்வி வியாபாரமாகிவிட்டது. இது போன்ற பிரச்சினைகளை களைய வேண்டும்.  தேவைக்கேற்ப கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று  கருத்து  தெரிவித்தனர்.

தொடர்ந்து  இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளையும்   எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தது.