டில்லி

உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்யப் பெயர் பட்டியலை கொலிஜியம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் போதிய நீதிபதிகள் இல்லாததால் பல வழக்குகள் வெகு நாட்களாக நிலுவையில் உள்ளன. பல அவசர வழக்குகளை விசாரிக்க போதுமான அளவு நீதிபதிகள் இல்லாததால் அவசர வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதையொட்டி உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உச்சநீதிமன்ற  நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30லிருந்து 33  ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் மசோதா அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்குப் பிறகு அந்த மசோதாவை ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். அதையொட்டி கொலிஜிய கூட்டம் கூடி புதிய நீதிபதிகளின் பெயர்களைத் தேர்வு செய்தது.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் நான்கு நீதிபதிகள்  பெயரை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அவர்கள் ராமசுப்ரமணியன், கிருஷ்ண முராரி, ரவீந்திர பட் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் ஆவார்கள். இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து இவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உள்ளது.