விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றது கொலம்பிய ஜோடி!

--

லண்டன்: விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கொலம்பிய நாட்டவர் என்ற சாதனையைப் படைத்துள்ளனர் ஜுவான் செபஸ்டியன் கேபல் மற்றும் ராபர்ட் ஃபாரா இணையர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் கொலம்பிய நாட்டிற்கு முதல் பெருமை கிடைத்துள்ளது. அந்நாட்டின் கேபல் மற்றும் ஃபாரா இணையினர், ஃபிரான்ஸ் நாட்டின் நிகோலஸ் மஹுட் மற்றும் எடோவார்ட் ரோஜர் – வாஸலின் இணையை 6-7(5), 7-6(5), 7-6(5), 6-7(5), 6-3 என்ற செட் கணக்கில் வென்றனர்.

விம்பிள்டன் இரட்டையர் போட்டியிலேயே கிட்டத்தட்ட 5 மணிநேரங்கள் வரை நடந்த மிகக் கடுமையான மற்றும் இரண்டாவது நீளமான போட்டி இதுவாகும். கடந்த 1992ம் ஆண்டு ஜான் மெக்கன்ரோ மற்றும் மைக்கேல் ஸ்டிச் ஆகியோர் வெற்றிபெற்ற 4 மணிநேரங்கள் 57 நிமிடங்கள் நடந்தப் போட்டிதான், விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியிலேயே நீளமான போட்டியாக கருதப்படுகிறது. கொலம்பிய இணையர் ஆடிய போட்டி அந்த நேர அளவிற்கு 4 நிமிடங்கள் முன்னதாகவே முடிந்துவிட்டது.

திங்கட்கிழமையன்று வெளியாகவுள்ள இரட்டையர் தரப் பட்டியலில் கேபல் முதலிடம் வகிப்பார் என்று கூறப்படுகிறது. “நாங்கள் எங்களின் நாட்டிற்காக இந்தக் கோப்பையை வென்றுள்ளோம். எங்களுக்கு இதுவொரு பெரிய பெருமை. நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த தருணம் ஒரு உணர்ச்சி மிகுந்த தருணம்” என்றார் கேபல்.