ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது இதில் 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த சென்னை வெள்ளம் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில் , “சென்னை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மடிப்பாக்கம். அந்தப் பகுதியை அப்படியே அரங்கில் உருவாக்க முடிவுசெய்தோம். ஜெயம் ரவி, கே.எஸ்.ரவிக்குமார், வினோதினி ஆகியோர் பங்கேற்ற இக்காட்சியை இரவு பகலாக மூன்று நாள்களில் படமாக்கினோம்” என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் தான் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கலை இயக்குனர் உமேஷ் மடிப்பாக்கத்தை அப்படியே அரங்கிற்குள் கொண்டுவந்துள்ளார். மின் சாதனங்களுடன் கால் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளவாறு படக்குழுவினர் பணியாற்றியது மிகுந்த சவாலாக இருந்துள்ளது.

“பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை கொடுத்தோம் அதனால் எந்த தவறும் நடைபெறவில்லை. கோடை காலத்தில் இந்தக் காட்சியை படமாக்கினோம். அதனால் தண்ணீர் நிரப்புவது பெரும் பிரச்சினையாக இருந்தது. இதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.