வாங்க, போகலாம்!: பயணிகளுக்கு உதவும் அமெரிக்கை நாராயணன்

ரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்  நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை நடு வழியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

மருத்துவமனைக்கு சென்றவர்கள், முதியவர்கள், பெண்கள், பள்ளியில் இருந்து திரும்பிய மாணவர்கள் என்று பல தரப்பினரும் அடைந்த சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பல கிலோமீட்டர் நடந்து வீடு போய் சேர்ந்தவர்களும் உண்டு.

“போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கலாம். அதற்காக திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமா? சட்டப்படி முன்னதாகவே அறிவித்துவிட்டு அல்லவா வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்? குறைந்தபட்சம் முதல்நாள் அறிவித்துவிட்டு மறுநாள் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமே” என்ற ஆதங்கக் குரல் எழுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான அமெரிக்கை நாராயணன் தனது காரில், “நான் செல்லும் வழியில் பஸ் பயணிகள் என்னுடன் வரலாம்” என்று  அறிவிப்பே வைத்திருக்கிறார்.

பேருந்து வேலை நிறுத்தத்தை சாக்காக வைத்து, வாடகை வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தும் நிலையில், தனது காரில் “வாங்க.. அழைச்சுட்டுப் போறேன்” என்று அறிவிப்பே வைத்திருப்பது  மகிழ்ச்சி அளிக்கும் ஆச்சரியம்தானே.

அமெரிக்கை நாராயணனை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மதிக்கிறேன். ஏற்கிறேன். அதே நேரம், அதற்காக அவர்கள் நடத்தும் போராட்டம் மக்களை.. குறிப்பாக எளிய மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

இந்த சூழலில் வேலை நிறுத்தததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்த அளவு செய்யும் உதவி இது. இது போன்ற சூழல் ஏற்படும்போதெல்லாம் இப்படி செயல்பட்டிருக்கிறேன்.

தற்போது நேற்று முதல் செய்துவருகிறேன். வாகனங்கள் வைத்துள்ளவர்கள் அனைவருமே இது போல செய்தால் மக்களுக்கு உதவியாக இருக்குமே” என்றார் அமெரிக்கை நாராயணன்.