விஏஓ போராட்டதை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை:

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் விஏஓக்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஏஓக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக   பொதுமக்களின் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை முன்வைத்து கிராம நிர்வாக அலுவலர்கள்  தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அச்சாணிகள் என்பது கிராம நிர்வாக அலுவலர்கள் தான். படிக்கும் மாணவர்களில் தொடங்கி உழவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களையும் வழங்குபவர்கள் அவர்கள் தான். இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட் டாலும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தாலும் முதலில் களத்தில் இறங்கி பாடுபடுவது கிராம நிர்வாக அலுவலர்கள் தான். இப்போது முன்வைக்கும் கோரிக்கைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி  வருகின்றனர்.

அப்போதே அவர்களை அழைத்து ஆட்சியாளர்கள் பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு ஊழியர்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைகள் மூலம் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள  பினாமி அரசு, கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

கிராம நிர்வாக அலுவலர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் பெரும்பாலானவை நியாயமானவையே. அதுமட்டுமின்றி, அந்தக் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை நிர்வாகம் சார்ந்தவை தானே தவிர, பொருளாதாரமோ, நிதியோ சார்ந்தவையல்ல. ஆனால், அதைக் கூட செய்வதற்கு இந்த அரசுக்கு மனம் வரவில்லை. அதுமட்டுமின்றி, பணி செய்யும் இடங்களிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக பல மாதங்களுக்கு முன்பே வாக்குறுதி அளித்திருந்த தமிழக ஆட்சியாளர்கள், அதை நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடங்கி யிருக்கின்றன. நவம்பர் 28-ஆம் தேதியிலிருந்தே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பணிகளை படிப்படியாகக் குறைத்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, இப்போதும் அடுத்தடுத்து மூன்று கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளனர். அவர்களின் போராட்டங்களால் மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைத்துத்  தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுதல், நில அளவீடுகள், உழவர்கள் தீர்வை செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையானப் பணிகளும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. இதே நிலை நீடித்தல் அரசு எந்திரத்தின் அடித்தட்டு நிர்வாகம் முற்றிலுமாக செயலிழக்கும் ஆபத்து உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை நிறைவேற்று, கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.