காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று 81வது பிறந்தநாள்…

சினிமா துறைகளில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராய் உருவெடுத்த நடிகர் கவுண்டமணிக்கு 81 வது பிறந்த நாள்.
1980களில், தமிழ்த்திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணியின் வசனங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றது.  கவுண்டமணியும், செந்திலும் இணைந்த காமெடிகள், பரோட்டாவும் குருமாவும். இட்லியும் சாம்பாரும் போல சிறப்பு பெற்றது.
தமிழ் சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் ஈர்த்துள்ளார். எம் ஆர் ராதாவுக்குப் பின் பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையில் கலந்து கலாய்ப்பவர் கவுண்டமணி.எம் ஆர் ராதா கூறுவது சவுக்கடி போலிருக்கும். கவுண்டமணி நகைச்சுவை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலிருக்கும்.
இவர் பேசிய வசனங்களில்,” அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…”, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாழைப்பழம் காமெடி போன்றவை இன்றுவரை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்’ என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை! இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் –கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம், நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார்.

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

தமிழகத்தில் சரித்திர சாதனை படைத்த கரக்காட்டக்காரன் படத்திற்கு,  கவுன்டமணிக்கு அழைப்பு ஏதும் போகாமல் செந்திலுக்கு படவாய்ப்பு வந்தபோது, கவுன்டர் நடிக்கவில்லை என்பது தெரிய வந்ததும், படத்தில் அண்ணன் கவுண்டமணி நடிக்கவில்லை என்றாவ், நானும் நடிக்கபோவதில்லை என்று அடம் பிடித்து கங்கை அமரனை சம்மதிக்க வைத்தவர் செந்தில் என்று கூறப்படுவது  உண்டு. அந்த படத்தில் வரும் “வாழைப்பழம்” காமெடி இப்போதும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தட்டாது.

இன்றைய  இணையதளத்தில் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் கவுன்டமணி படத்தையும், வசனத்தையும் வைத்து வராத மீம்ஸ்களே இல்லை. அந்த அளவுக்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றவர் கவுண்டமணி,  இவரது நகைச்சுவைக்கு இணையாக இனிவரும் யாரும் இவருக்கு ஈடுஇணை கொடுக்க முடியாது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் என்றும் உண்டு என்று நிரூபித்த கவுண்டமணி… தமிழ்த்திரையுலகில் என்றுமே இவர்தான் காமெடி கிங். என்பதில் சந்தேகமே இல்லை.
கவுண்டமணி மேலும் பல்லாண்டு பூரண உடல்நலத்துடன் வாழ பத்திரிகை.காம் இணையதளமும் வாழ்த்துகிறது.