டில்லி,

றுப்பு பணத்தை மீண்டும் ஒழிக்கும் விதமாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் வாபஸ் பெற இருப்பதாகவும், அதே நேரத்தில்  மீண்டும்  1000 ரூபாய் நோட்டை வெளியிட மத்திய அரசு தயாராகி வருவதாகவும்  தலைநகர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு திடீரென ரூ.500, 1000 செல்லாது என அதிரடியாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டும், 500 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் புதிய 200 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய 1000 ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன், புதிய கலரில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டு வெளிவரக்கூடும் என்று ரிசர்வ் வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் உத்தரவின்பேரில், புதிய 1,000 ரூபாய் நோட்டுக்கான வடிவமைப்பு, காகிதம், அச்சிடுதல் போன்ற பணிகள் முழுவீச்சாக நடைபெற்று வருவதாகவும், இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்றும், அதைத்தொடர்ந்து வரும் 2018ம் ஆண்டு புதிய 1000 ரூபாய் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக  டில்லி வட்டார  தகவல்கள் கூறுகின்றன.

தற்போது இந்த புதிய 1000 ரூபாய் நோட்டுகளை கர்நாடகாவில் உள்ள அரசு அச்சகங்களில் அச்சிடப்பட்டு வருவதாகவும், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் இடையில் உள்ள நீண்ட இடை வெளியின் காரணமாக ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக மீண்டும் 1000 ரூபாய்  நோட்டை அறிமுகம் செய்யும் என்றும், அதே நேரத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் புதிய 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்  கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில்  மத்திய அரசு மீண்டும் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.