ராணுவ தியாகிகளுக்கு மதச்சாயம் பூச வேண்டாம்….பிராந்திய தளபதி பதிலடி

டில்லி:

‘‘வீரமரணம் அடையும் ராணுவ தியாகிகளுக்கு மதச்சாயம் பூச வேண்டாம்’’ என்று ஐதராபாத் எம்.பி.அசாதுதீன் ஒவைசிக்கு வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தேவராஜ் அன்பு பதிலளித்துள்ளார்.

காஷ்மீர் சுஞ்சுவான் முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் 4 பேர் காஷ்மீரை சேர்ந்த முகமது அஸ்ரப் மிர், ஹபிபுல்லா குரேஷி, மன்சர் அகமது தேவா மற்றும் முகமது இக்பால் சேக் என தெரியவந்தது. மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு முழு மரியாதையுடன் இவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து எஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘‘இந்திய இஸ்லாமியர்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்புவோரது எண்ணம் தவறானது. தாக்குதலில் இறந்தவர்களில் 4 பேர் இஸ்லாமியர்கள். இந்திய இஸ்லாமியர்களை, பாகிஸ்தானியர்கள் என்று கூறுவோர் இதில் கற்று கொள்ள வேண்டும். நாட்டிற்காக வாழ்க்கையை தியாகம் செய்கிறோம்’’ என்றார்.

இதற்கு வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தேவராஜ் அன்பு பதில் கூறுகையில், ‘‘ வீரமரணம் அடையும் தியாகிகளுக்கு மதச்சாயம் பூச வேண்டாம். நாங்கள் எந்த வீரருக்கும் மதச்சாயம் பூசுவது கிடையாது. ராணுவத்தை பற்றி எதுவும் தெரியாதவர்கள் தான் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர்’’ என்றார்.