ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்த உரி, சஞ்சுவான் மற்றும் நாக்ரோடா முகாம்களின் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மாநிலத்தில் உரி மற்றும் நாக்ரோடா பகுதிகளில் இருந்த ராணுவ முகாமில் கடந்த 2016 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.  கடந்த வருடம் சஞ்சுவான் முகாமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது.  இந்த மூன்று தாக்குதல்களிலும் சேர்ந்து மொத்தம் 46 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.   உரி தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கை எடுத்தது.

இந்த தாக்குதல்களுக்கு முக்கிய காரணம் ராணுவ அதிகாரிகளின் கவனமின்மை என கூறப்பட்டு வந்தது.   உரி பகுதியில் ராணுவ வீரர்கள் தங்க வசதியான தங்குமிடம் இருந்தும் வீரர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.   முக்கியமாக இந்த தாக்குதல் பற்றி உளவுத்துறை எச்சரிக்கை அளித்த பிறகும் இந்த தவறு நடந்துள்ளது.

அதைப் போலவே நாக்ரோடாவில் பல அடுக்கு பாதுகாப்புடன் இருந்த ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்த அனைத்து அடுக்குகளிலும் இயந்திர துப்பாக்கியுடன் கூடிய வீரர்கள் காவலுக்கு இருந்துள்ளனர்.  அதையும் மீறி நடந்த தீவிரவாத தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லபட்டனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தாக்குதல் நடந்த முகாம்களின் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.   பிரதமர் மோடியும் இந்த தாக்குதலினால் மிகவும் அதிருப்தி அடைந்திருந்தார்.  இருந்தும் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.  இந்த புதிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்த முகாம் களின் அதிகாரிகளை கட்டாய ஓய்வு பெற உத்தரவிடப்பட உள்ளதாகவும் அவர்கள் மறுத்தால் பணி நீக்கம் செய்யலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.