சேலம்- ஓமலூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிக்கான கணக்கெடுப்பு துவக்கம்

சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 160 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. விமான நிலையம் கட்டப்பட்டதில் இருந்து இதுவரை விமான போக்குவரத்து செயல்படமலேயே உள்ளது. இந்த நிலையில் செயல்படாத விமான நிலையத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதன்படி சுமார் 570 ஏக்கர் பரப்பில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் பெரும்பாலும் விவசாய நிலமாகவே இருப்பதால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை எடுக்க விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சேலம் விமான நிலையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதனை தொடர்ந்து தொடர்ந்து விமான நிலைய விரிவாக்கத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள 570 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 70 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், கோவில்கள், வீடுகள், சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யும்போது அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குதல், மாற்று இடம் வழங்குதல் குறித்தும் அறிக்கை தயார் செய்வதற்காக இந்த ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகள் தோட்டத்தில் உள்ள மரங்கள், பயிர்கள், விவசாயக் கிணறுகள் மற்றும் அதன் மதிப்பீட்டு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.