ஐபிஎல் தொடருக்கு வீட்டிலிருந்தே நேரடி வர்ணனையா?

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடர் நேரடி ஒளிபரப்பின்போது, வீட்டிலிருந்தே வர்ணனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிய முயற்சியின் அடிப்படையில் ‘3டி’ கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. செஞ்சுரியன் மைதானத்திலிருந்து நடத்தப்பட்ட இப்போட்டியை ஸ்டார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இப்போட்டிக்கு, பரோடாவிலிருந்து தீப் தாஸ் குப்தா, கொல்கத்தாவிலிருந்து இர்ஃபான் பதான் மற்றும் மும்பையிலிருந்து சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் தத்தமது வீட்டிலிருந்தே நேரடி வர்ணனை செய்தனர். இந்தப் புதிய முயற்சி கச்சிதமாக அமைந்தது.

இதனையடுத்து, ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என்று கூறப்படும் ஐபிஎல் தொடரிலும், இதேபோன்று, வர்ணனையாளர்கள் தங்களின் வீட்டிலிருந்தே வர்ணனை செய்யும் வகையிலான நடைமுறையைப் பின்பற்ற ஸ்டார் தொலைக்காட்சி முயன்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.