சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி அரங்கில் நிலவின் தென் துருவத்திற்கு முதன் முறையாக இந்தியா சார்பில் சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், சுமார் 1 மாத கால பயணத்திற்கு பின்னர், விண்கலத்தில் இருந்து விக்ரம் எனப்படும் லேண்டர் தனியாக பிரிந்தது. இந்த லேண்டர் இன்று அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடினமான பாதையை எளிதில் கடந்த விகரம் லேண்டர், திடீரென தனது பாதையை தெளிவுப்படுத்த இயலாமல், சிக்னலை இழந்தது. இதனால் எதிர்பார்த்த படி, தரையில் இறங்கியதா ? என்கிற கேள்வி தொடர்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், “லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். நிலவின் பரப்பில் இருந்து 2.1 கி.மீட்டர் தூரத்தில் லேண்டர் பயணிக்கும் போதே, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த படி லேண்டர் தரையிறங்கவில்லை என்றாலும், தொடர்ந்து லேண்டரின் பயண பாதைகளை வைத்து, ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.