மருத்துவக் கல்வி சேர்க்கை : பிற மாநில சாதி சான்றிதழ் செல்லாது : உயர்நீதிமன்றம்

சென்னை

பிற மாநிலங்களில் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவி கீதா.   இவர் தமிழக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார்.   அதற்காக இவர் அவருக்கு ஆந்திர அரசு வழங்கிய பழங்குடியினர் சாதி சான்றிதழை அளித்தார்.   அத்துடன் அந்த சான்றிதழ் அடிப்படயில் தனக்கு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர அனுமதி கோரினார்.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அவர் கோரிக்கையை நிராகரித்தது.   அதை ஒட்டி  கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .   தனது வழக்கு மனுவில் கீதா, “ஆந்திர மாநில அரசு எனக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கி உள்ளது.   ஆனால் தமிழக ம்ருத்துவக் கல்வி இயக்குனரகம் எனக்கு கல்லூரியில் சேர அனுமதி வழங்கவில்லை.   எனக்கு பழங்குடி இட ஒதுக்கீட்டின் கிழ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அரசுக்கு உத்த்ரவிட வேண்டும்” என கோரினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.  அவர் தனது தீர்ப்பில், “தமிழக மருத்துவக் கல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில் ஏற்கனவே விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அதன்படி பிற மாநில சாதிச் சான்றிதழுடன் விண்ணப்பித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர உரிமை இல்லை.   எனவே மனுதாரர் கீதாவின் கோரிக்கையை ஏற்க முடியாது.   அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.