கொரோனாவை எதிர்த்து போராட நிதி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா வைரசை எதிர்த்து போராட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை செலவிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், வாழ்வாதாரங்களை பாதிக்கக்கூடிய நெருக்கடியை எதிர்த்து போராடுவதற்கான அரசின் முயற்சிகளை நிறைவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்கள் ஆண்டுக்கு 15,000 கோடியை அறக்கட்டளைக்காக செலவிடுகின்றன. குறைந்தது 500 கோடி டாலர் நிகர மதிப்பு அல்லது 1,000 கோடி வருவாய் அல்லது 5 கோடி நிகர லாபம் உள்ள நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் குறைந்தது 2% சமூகத்துக்காக செலவிட வேண்டும் என்று நிறுவனங்கள் சட்டம் கோருகிறது.

அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அது ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விளக்கப்பட வேண்டும். இந் நிலையில், கம்பெனிகள் விவகார துறை அமைச்சகமானது ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில் நிதியானது, பராமரிப்பு உள்ளிட்ட சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற வழிகளில் செலவிடப்படலாம் என்று கூறியுள்ளது. அதாவது, நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.

நாட்டில் வைரஸ் பரவுவதையும், உலக சுகாதார அமைப்பு அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்ததையும், பேரழிவாக கருதும் அரசு முடிவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.