தலைமைப் பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சிலர், தமது குடும்பப் பின்னணியைப் பற்றி (குறிப்பாக, அது எளியப் பின்னணியாக இருந்தால்) ஒரு விளம்பரத்திற்காக சொல்லிக்கொண்டு, மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதுண்டு!

அதாவது, தானும் ஒரு எளியப் பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால், உங்களின் கஷ்டம் எனக்கும் புரியும் என்று ‘ஸீனாக’ சொல்லிக்கொள்வது!

‘தான் ஒரு விவசாயி’ என்ற அடையாளத்தையே பல்வேறு அரசியல்வாதிகள் விளம்பரத்திற்காக சொல்லிக் கொண்டதுண்டு.

ஆனால், 2014ம் ஆண்டில் நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்த ஒரு அரசியல்வாதி ‘ஏழைத்தாயின் மகன்’ என்ற அடையாளத்தைப் பிரபலமாக்கினார்!

அந்த ‘ஏழைத்தாயின் மகன்’ என்ற கோஷத்தை நம்பிய இந்திய ஏழைகளில் பெரும்பாலானோர், தங்கள் வாழ்வில் இனிமேல் சுபிட்சம்தான் என்று அப்பாவியாக நம்பியிருக்கலாம்!

அந்த ஏழைத்தாயின் மகனைப் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக, அரசக் குடும்பத்து மகன் ஒருவரைப் பற்றி பார்த்துவிடுவோம்… அவரும் அரசியல்வாதிதான்..!

ராஜ குடும்பத்து மகன்..!

வி.பி.சிங் என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற உத்திரப் பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தலைவர் பிறப்பால் ராஜ்புத்திர ஜமீன்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 1931ம் ஆண்டு பிறந்த இவர், கல்லூரி படிப்பிற்கு பிறகான காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, கடந்த 1969ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1970களில், இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சர் மற்றும் கேபினட் அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

பின்னர், 1980ம் ஆண்டு உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஆக்கப்பட்ட வி.பி.சிங், அம்மாநிலத்தின் தென்‍மேற்குப் பகுதிகளில் நடைபெற்றுவந்த கொள்ளைச் சம்பவங்களை ஒழிப்பதில் ஆர்வம் காட்டினார். இந்த நடவடிக்கைகளால் அவரின் பிரபல்யம் அதிகரித்தது.

அதில் ஓரளவு வெற்றிக் கண்டபோதும், தன்னால் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்று 2 ஆண்டுகளில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டார் (கவனிக்க..!).

பின்னர், மத்திய அமைச்சரவைக்கு மீண்டும் திரும்பினார். ராஜீவ் காந்தி பிரதமரானபோது, இந்தியாவின் நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். அப்போது முதல் அவர் இன்னும் தேசிய அளவில் பிரபலமடைந்தார்.

அன்றைக்கு சக்திவாய்ந்த தொழிலதிபராகவும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி மீதும், ராஜீவ் காந்தியின் நெருங்கிய குடும்ப நண்பராக அறியப்பட்ட அமிதாப் பச்சன் மீதும், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளுக்கான வருமான வரி ரெய்டை நடத்தினார். இது பெரிய பரபரப்பைக் கிளப்பியது. இந்த நடவடிக்கை தனது பதவியையே பதம் பார்க்கும் என்பதைப் பற்றி வி.பி.சிங் அலட்டிக் கொள்ளவேயில்லை.

இதன் விளைவு, அவர் நிதியமைச்சகத்திலிருந்து, ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டார். அதற்காக அத்துறையில் முடங்கிவிடவில்லை வி.பி.சிங்..! நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியது தொடர்பாக நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணையில் ஆர்வம் காட்டினார். விளைவு, மத்திய அமைச்சர் பதவியே பறிபோனது! அதைப் பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்தே ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு, தனிக்கட்சி மற்றும் அரசியல் கூட்டணிகள் என்று பயணித்து, 1989ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் அமர்கிறார். இவரின் ஒருங்கிணைந்த ஜனதா தளத்திற்கு 142 இடங்களே கிடைத்திருக்க, இடதுசாரிகள் மற்றும் வலதுசாரி பாரதீய ஜனதா என்று முரண்பட்ட அரசியல் சக்திகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் அமர்கிறார்.

இத்தகைய சூழலில், பிரதமர் பதவியில் அமரக்கூடிய எவரும், பதவியைத் தக்கவைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்து, ஆதரவளிப்பவர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்வார்கள் என்பதுதான் பொதுவாக நாம் பார்க்கக்கூடிய அரசியல் காட்சிகள்.

ஆனால், வி.பி.சிங்கின் அரசியல் நடவடிக்கைகள் வித்தியாசமானவை. தன் எண்ணங்களில் சமரசம் செய்துகொள்ளாதவை. மத்திய அமைச்சராக இருந்தபோதே தன் அதிரடிகளைக் காட்டியவர், பிரதமர் பதவி வந்தவுடன் அதை இன்னும் அதிகரித்தார். கடந்த ஆட்சிகளில் கிடப்பில் போடப்பட்ட நீதிபதி மண்டல் கமிஷனின் பரிந்துரைகள்தான் அவை. வலதுசாரி பாரதீய ஜனதாவுக்கு சுத்தமாக ஆகாத, உயர்ஜாதி கம்யூனிஸ்டுகளும் விரும்பாத பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு அளிக்கும் பரிந்துரையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார் ராஜ குடும்பத்தில் பிறந்த வி.பி.சிங்.

‘மெரிட்’ கோஷம் எழுப்பக்கூடிய, அதேசமயம் எதையும் சாதிக்காத உயர்ஜாதி மாணாக்கர்கள், இதுதொடர்பாக அன்றைய நாட்களில் நிகழ்த்தியப் போராட்டங்களையும் வன்முறைகளையும் நாம் அறிவோம்.

ஆனாலும் வி.பி.சிங் தளரவில்லை, பயந்து பின்வாங்கவில்லை. இறுதியாக, விஷயம் நீதிமன்றத்திற்குச் சென்று, கடந்த 1992ம் ஆண்டுதான் வி.பி.சிங்கின் உத்தரவிற்கு ஆதரவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் கிடைத்தது.

இது ஒருபக்கம் என்றால், அடுத்து, நாட்டை மதரீதியாக துண்டாட துடிக்கும் சங்பரிவார சக்திகளுக்கு இவர் எப்போதும் எதிரானவர்! வலதுசாரி பாரதீய ஜனதாவின் ஆதரவில் இவர் பிரதமர் பதவியில் அமர்ந்திருந்தாலும், அப்போது அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரைக்கு எதிரானவராக இருந்தார். ஒருகட்டத்தில், அத்வானியை கைதுசெய்ய உத்தரவிட்டு, அதன்வாயிலாக பாரதீய ஜனதாவின் ஆதரவை இழந்ததோடு, பலரும் கனவு காணும் பிரதமர் பதவியையும் பறிகொடுத்தார். அவரின் 343 நாள் அரசாங்கம் முடிவுக்கு வந்தது.

இவரின் மதவாத எதிர்ப்பு என்பது பிற்காலத்திலும் தொடர்ந்தது. கடந்த 1992ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்படும் சூழலில், கரசேவகர் கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் அயோத்தி நோக்கி செல்லும்போது, ‍தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் பல மன்னர் குடும்பங்கள், ஜனசங்கத்திற்கு ஆதரவாகவும், வலதுசாரி இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாகவும் அறியப்பட்டவை. (இந்திரா காந்தி, மன்னர் மானிய ஒழிப்புத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு பிரதானக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு). ஆனால், மன்னர் குடும்பத்தில் பிறந்த வி.பி.சிங், இதற்கு நேர்மாறாகவே இருந்துள்ளார்.

மேலும், தான் ஒரு பணக்காரராகப் பிறந்திருந்தாலும், பணக்காரர்களை எதிர்த்து, சாதாரண மக்களுக்கான திட்டங்களில் அக்கறை செலுத்தி வந்துள்ளார். அதேசமயம், கடந்த 1996ம் ஆண்டு பிரதமர் பதவி இவரை மீண்டும் தேடிச் சென்றபோது, அதை மறுத்துவிட்டார். அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தப் பிறகும், சமூக நீதி குறித்து பல இடங்களில் பேசி வந்துள்ளார். ஊழலுக்கு எதிரானவராகவும் இருந்துள்ளார்.

ஏழைத் தாயின் மகன்!

சரி, இப்போது நாம் ஏழைத்தாயின் மகன் கதைக்கு வருவோம். அந்த மகன் யார்? என்பதை நாம் அனைவரும் அறிவோம்தான். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, இவர் செய்த சாதனைகளைப்(!) பற்றி நாம் இப்போது பேசப்போவதில்லை. நாட்டின் உட்சபட்ச பதவியில் அமர்ந்த பிறகு, இந்த ஏழைத்தாயின் மகன், ஏழைகளுக்காக செய்த சில விஷயங்கள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையைத்தான் ஓட்டப் போகிறோம்..!

(ஏழைத்தாயின் மகனுக்கு கிடைத்துள்ள அதிகாரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதல்ல; யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதல்ல மற்றும் குறுகிய காலஅளவு கொண்டதல்ல என்பதையும் நினைவில் வைக்க வேண்டியுள்ளது…)

* கருப்புப் பணம் மீட்கப்பட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்ற வாக்குறுதி மெகா காமெடி ஆனதோடு, அப்படி கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலைக்கூட வெளியிட தயாரில்லை

* பண மதிப்பிழப்பு என்ற ஒரு பொருளாதார பேரழிவு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு, அதனால், பலகோடி ஏழை மக்கள் அல்லலுற்று, பலகோடி பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் என்னவாயிற்று? என்ற கேள்வி எழுந்து, கடைசியில் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்ற பெயர் அந்நடவடிக்கைக்கு கிடைத்தது!

* ஜிஎஸ்டி என்ற திட்டமிடப்படாத வரிவிதிப்பு முறை ஒரே இரவில் அறிமுகம் செய்யப்பட்டு, பல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடுவிழா காணும் நிலை ஏற்பட்டது

* நாட்டின் வேளாண்மைத் துறை மாபெரும் சரிவை சந்தித்து, ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதும், அந்த விஷயம் கண்டுகொள்ளப்படவில்லை

* நாட்டின் நிலவும் கடுமையான வேலை வாய்ப்பின்மை குறித்து கவலையில்லை

* டெல்லியில் பல நாட்களாக நிர்வாணப் போராட்டம் முதல் மலம் தின்னும் போராட்டம் வரை நடத்திப் பார்த்த தமிழக விவசாயிகளை ஏன் என்று கடைசிவரை திரும்பிப் பார்க்கவேயில்லை

* ஒக்கிப் புயலில் சிக்கி, கடலில் மாட்டிக்கொண்ட மீனவர்களைத் தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. பலர் கடலிலேயே மாண்டுவிட, பல மீனவர்கள் தாங்களாகவே ஒன்று சேர்ந்து கடலுக்குள் சென்று, புயலால் திசைமாறிச் சென்றிருந்த பலரை மீட்டு வந்த அவலமும் நடந்தது

* அடுத்ததாக, கஜா புயலால் தமிழகத்தில் பொருளாதாரப் பேரிழப்பு ஏற்பட்டபோது, நேரடியாக வந்து பார்வையிடவோ, போதுமான நிதியையோ ஒதுக்கவில்லை

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு, பெயரளவிற்குக்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை

* திவாலாகும் நிலையிலுள்ள, போர் விமானத் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு, ரஃபேல் விமானம் தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டது

* விலைக்குறைவான விமானத்தை விலை அதிகமாக வாங்கும் வகையிலான ஒப்பந்த திருத்தம்

* நாட்டின் பெரு முதலாளிகளுக்கு சார்பான தொடர் திட்டங்கள். அவர்களுக்கு ஆதரவான தொடர் வெளிநாட்டுப் பயணங்கள்

* உடை, உணவு என்று அனைத்திலும் பின்பற்றப்படும் ஆடம்பரம்

* ஜம்மு காஷ்மீரில் நிகழும் மாபெரும் மனித உரிமை மீறல்கள்

* தொடர்ச்சியாக மிரட்டப்படும் ஊடகங்கள்

* நாட்டில் பரவலாக நடைபெறும் மதவாத வன்முறைகள்

* மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா

* எதிர்க்கருத்து கொண்டோரை மற்றும் விமர்சிப்போரை மிரட்டுவது & நசுக்குவது

* கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பெருமுதலாளிகளை திரும்பக் கொண்டுவருவதாக பாவ்லா காட்டிவிட்டு, அதுதொடர்பாக எந்த உண்மையான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது

* நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்குவது

* வெகுமக்கள் நம்பிக்கை வ‍ைத்திருக்கும், இந்திய அரசியலமைப்பு அம்சங்களின் நம்பகத்தன்மைகளை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவது

* கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் ஆகியவற்றுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியளவைத் தொடர்ந்து குறைப்பது

* சமூகத்தில் மேம்பட்ட உயர்ஜாதியினருக்கு, 10% இடஒதுக்கீட்டை வாரி வழங்கியது

* பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தாமல் இருப்பது; அப்படியே நடத்தினாலும் அதில் எதுவுமே பேசாமல் இருப்பது

* இவை அனைத்திற்கு சிகரம் வைத்தாற்போல், கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்ட முற்றிலும் திட்டமிடப்படாத ஊரடங்கில், கோடிக்கணக்கான புலம்பெயர் ஏழை மக்களை, குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட மதிக்காமல், அவர்களை, விலங்குகளைவிட கேவலமாக சாலைகளில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் நடக்கவிட்டது. இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு, உலகளவில், ஒரு மாபெரும் மானுடத் துயரமாக வர்ணிக்கப்படுகிறது

* ஊரடங்கால், வாழ்வாதாரம் முடங்கிப்போன ஏழைகளின் வயிறு அரை பாகமாவது நிரம்புவதற்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சில மாதங்களுக்கு டெபாசிட் செய்ய, பல பொருளாதார அறிஞர்கள் வலியுறுத்தியும் அதைப்பற்றி கண்டுகொள்ளாதது

* ‘பிஎம் கேர்ஸ்’ என்ற பெயரில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்று ஒரு நிவாரண தொகை திட்டத்‍தை, பிரதமர் பெயரில் அரசு திட்டம்போல் தொடங்கி, அதில் நிதி அளிப்பதற்காக சலுகைகளையும் அறிவித்து, கடைசியில், ஆயிரக்கணக்கான கோடிகளில் அதில் பணம் சேர்ந்தவுடன், அதை ஒரு தனியார் அமைப்பின் திட்டமாக நீதிமன்றத்தில் தெரிவிப்பது.

இப்படியாக எத்தனை எத்தனையோ சாதனைகளை, ஏழை மக்களுக்காக(!) செய்துள்ளார் அந்த ஏழைத் தாயின் மகன்..! முழுமையாகப் பட்டியலிட்டால் நேரம் போதாது!

தனக்குக் கிடைத்த அரசியல் அதிகாரம் ஒரு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது என்றபோதும், அதன் காலம் குறுகிய அளவினதே என்றபோதும், சாதாரண மக்களுக்கு தன்னால் இயன்றதை செய்ய முயன்றவர் ராஜ குடும்பத்தில் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங்!

ஆனால், தான் ஒரு ஏழைத்தாயின் மகன், சிறுவயதில் டீ விற்பனை செய்தேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் ஒருவரின் நடவடிக்கைகள், தொடர்ந்து ஏழைகளுக்கு எதிராகவும், பெருமுதலாளிகளுக்கு சார்பாகவுமே இருக்கின்றன.

எனவே, ஒருவர் எந்தப் பின்னணியிலிருந்து பதவிக்கு வருகிறார் என்பதைக் காட்டிலும், அவர் யாருக்கானவராய், யாரால் வளர்த்துவிடப்பட்டவராய், எந்தவிதமான சிந்தனைப் போக்கு உடையவராய் இருக்கிறார் என்பதைத்தான் இங்கே சிந்திக்க வேண்டியதாயிருக்கிறது..!

 

– மதுரை மாயாண்டி