சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக  சீமான் அறிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வாரின் 7வது ஆண்டு நினைவு நாளையொட்டி  நேற்று அவரது உருவப்படத்துக்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  ரஜினி முடிவை வரவேற்கிறேன். அவரது உடல்நலம் முதன்மையானது. அரசியல் ரீதியாக, அவர் மீது கடுமையான சொற்களை பேசி உள்ளேன். அது, அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால், வருந்துகிறேன். இனி எப்போதும், அவர் எங்கள் புகழ்ச்சிக்கு உரியவர்.

ஆசிய கண்டம் முழுதும், அவரது புகழ் வெளிச்சம் பரவி கிடக்கிறது. அவருக்கு அரசியல் அவசியம் இல்லை. அவர் இளம் வயதிலேயே, அமைதியை தேடி சென்றவர். இப்போது, அவருக்கு கூடுதல் அமைதி தேவை.

அரசியலில், உட்கட்சி பிரச்னையை சமாளிக்கவே சிரமமாக இருக்கும். அனைவரும் திட்டுவர். என்னை போன்ற ஒரு காட்டானாலேயே சமாளிக்க முடியவில்லை; அவரால் இதை தாங்க முடியாது. அதனால் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்றேன்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அங்கு அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க.,விற்கு மாற்று, நாம் தமிழர்தான்; அ.தி.மு.க., அல்ல.

இவ்வாறு சீமான் கூறினார்.