சென்னை:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக தலைமையில் காங்கிரஸ் உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரி தவிர மற்ற 9 தொகுதிகள் எது என்பது குறித்து நாளை திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் காங்கிரஸ் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோரைக் கொண்ட தொகுதி பங்கீட்டிற்கான பேச்சு வார்த்தை குழுவினர், நாளை காலை 11 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில்  திமுக குழுவினரோடு பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த  தமிழக காங்கிரஸ் தலைவர்,  திமுக தலைமையிலான எங்கள்  கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி என்றார்.  இந்திய கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஆனால் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சி ஊழல் நிறைந்த அ.தி.மு.க.வுடனும், பிற கட்சிகளுடனும் சேர்ந்து தமிழகத்தில் கூட்டணி அமைத்துள்ளது. அது ஒரு மக்கள் விரோத கூட்டணி என்று கூறினார்.