நேற்று நடைபெற்ற திமுகவின் மாதிரி சட்டமன்ற கூட்டம்

சென்னை:

சென்னையில் நேற்று நடைபெற்றது  போலவே மேலும் 3 மாவட்டங்களில் போட்டி சட்டமன்ற கூட்டத்தை கூட்ட இருப்பதாக திமுக அறிவித்து உள்ளது.

கடந்த 29ந்தேதி தமிழக சட்டமன்ற மானிய கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அன்று கருப்பு சட்டையுடன் கலந்துகொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் விவகாரத்தை கிளப்பி வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபைக்கு வரப் போவதில்லை என அறிவித்ததோடு, போட்டி சட்டமன்ற கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து  நேற்று   சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மாதிரி சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்பட பலர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், மேலும் 3 மாவட்டங்களில் அடுத்த மாதம் மாதிரி சட்டசபை நடத்த இருப்பதாக திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜூன் 5 நெல்லையிலும், ஜூன் 8 திருச்சியிலும், ஜூன் 12 சேலத்திலும் மாதிரி சட்டசபை நடத்தப்பட உள்ளது.

இந்த மாதிரி சட்டசபை கூட்டங்களில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறி உள்ளார்.