கண்ணகியை இழிவு படுத்தியதாக மருத்துவர் ஷாலினி மீது காவல்துறையில் புகார்
பிரபல மனநல மருத்துவர் ஷாலினி, கண்ணகியை அவமதித்துவிட்டார் என்றுகூறி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட இருப்பதாக எழுச்சித்தமிழர் பேரவை செயலாளர் பா.இறையரசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனநல மருத்துவர் ஷாலினி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “கண்ணகியின் கதையை கேட்டு கற்பு என்ற பெயரால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். 13 வயது சிறுமி தன்னை பலாத்காரப்படுத்தியவனையே கணவனாக நினைக்க ஆரம்பித்தாள். கேட்டதற்கு அதுதானே கற்பு.. அப்படித்தானே கண்ணகி வரலாறு சொல்கிறது என்றால். அவளிடம் கண்ணகியின் முழு கதையும் தெரியுமா என்றேன். தெரியாது என்றாள். கண்ணகி தனது மார்பகத்தை பிடுங்கி எறிந்து மதுரையை எரித்ததாக கூறப்படும் கதையை கூறினேன். அதற்கு அந்த சிறுமி, கண்ணகி என்ன மெண்டலா என்றாள்” என்று ஷாலினி பேசினார்.
மேலும், “கண்ணகியின் கதையை குழந்தைகளுக்கு படிக்கக் கொடுத்தால் அவர்கள் பின்னாளில் குழப்ப நிலைக்கு ஆளாவார்கள்” என்று பெரியார் கடிதம் எழுதியதாகவும் பேசினார்.
ஷாலினியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை. மேலும் அறக்கட்டளையினர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஷாலினி மீது புகார் அளித்துள்ளனர். கண்ணகியை தரக்குறைவாக பேசிய மனநல மருத்துவர் ஷாலினியை கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பின் சார்பாக ஷாலினி மீது சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்போவதாக தமிழ் எழுச்சி பேரவை என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பின் செயலாளர் பா.இறையரசன் நம்மிடம், “கற்புத் தெய்வம் கண்ணகியை, மனநோயாளி என இழிவு செய்துள்ளார், மனநல மருத்துவர் ஷாலினி. கண்ணகியைச் சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாக மட்டுமல்லாமல் தெய்வமாகத் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் இலங்கையிலும் வழிபட்டு வருகின்றனர்.
ஆகவே இந்து மக்களையும் தமிழர்களையும் தமிழ்க் காப்பியத்தையும் பெண்கள் போற்றுகிற கற்புத் தெய்வத்தையும் , புதுமை என்ற பெயரில் மனநல மருத்துவர் ஷாலினி இழிவு செய்வதைக் கண்டிக்கிறோம்.
பாரதியாரையும் கண்ணகியின் புகழ் பாடிய சிலம்புச் செல்வர் ம பொ சி அவர்களையும் இழிவு செய்து அவர் பேசியுள்ளார்.
சங்ககாலத்தில் வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாய், முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி வள்ளலையும், “பைத்தியம்,… மென்டல்” என்றெல்லாம் இழிவு செய்துள்ளார்.
இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள நிகழ்படம் (யு டியுப் வீடியோ) தடை செய்யப்பட வேண்டும். ஷாலினியை கைது செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.