சர்க்கார் சர்ச்சை: திருட்டு பட்டத்தை தொடர்ந்து தேசதுரோக வழக்கில் சிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை:

ர்க்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினரும், தமிழக அரசும் சிலிர்ந்தெழுந்துள்ள நிலையில், படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகாரில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீது அவதூறுகளை கூறியிருப்பதை சுட்டீக்காட்டி, தேச துரோக சட்டப்பிரிவில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சர்கார்’.

இந்த படத்தில், கள்ள ஓட்டு என்பதை கருவாகக் கொண்டும், ஜெ. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மிக்சி கிரைண்டர் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் அரசியல் நெடி கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதையை எதிர்த்து வருண் என்ற கதாசிரியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையை தொடர்ந்து, கதை வருணுக்கு சொந்தமானது என்று இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக சர்க்கார் கதை திருட்டுக்கதை என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது, படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் படத்தை தமிழகம் முழுவதும் முடக்குவோம் என்று அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சர்க்கார் படத்தை சட்ட ரீதியாக முடக்குவது குறித்து, தமிழக அமைச்சர்கள் சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கேபி அன்பழகன் உள்பட பலர் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சமூக நலனை சீர்குலைக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராக பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் சர்கார் படம் இருப்பதாக தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Complaint lodged against Sarkar director A.R.Murugadoss the complainant wants Sarkar director booked for sedition for criticizing government schemes, சர்க்கார் சர்ச்சை: திருட்டு பட்டத்தை தொடர்ந்து தேசதுரோக வழக்கில் சிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
-=-