புகார்: மக்கள் வரிப்பணத்தில் சசிகலாவுடன் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு!

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திக்க, பொதுமக்கள் வரிப்பணத்தை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் செலவிடுவதாக புகார் கிளம்பி யிருக்கிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த பிப்.,14ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்கா வழங்கிய நான்கு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்யப்பட்டது. ஜெயலலிதா இறந்து விட்டதால் விடுவிக்கப்பட்டார்.

மற்ற 4 பேரும் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா அதிமுவின் பொதுச்செயலாளராக இருப்பதால்,  கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கார், விமானம் மூலம் பல முறை பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து வருகிறார்கள்.

இதையடுத்து சிறையில் இருந்தபடியே தமிழகத்தை சசிகலா ஆள்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு செல்ல, பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறும் ‘பயணப்படி’யை பயன்படுத்தி வருவதாக புகார் கிளம்பியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல் படி இத்தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பயணப்படியாக ஜன., 2016 முதல் மார்ச் 20, 2017 வரை 51 லட்சத்து 90 ஆயிரத்து 655 ரூபாய் பெற்று இருக்கிறார். இத்தொகையில் பல முறை பெங்களூரு சென்று வந்துள்ளார்

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பாராளுமன்ற அலுவலர்கள் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை சட்டம் 1953ன் படி துணை சபாநாயகர் டில்லி, சொந்த ஊர், தொகுதிக்கு செல்லுதல், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பயணப்படியை பயன்படுத்திக்கொள்ள முடியும்

தம்பிதுரை மட்டுமின்றி தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்னையிலிருந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க தங்களது பயணப்படியிலிருந்து பல லட்ச ரூபாய் செலவு செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.

கார்ட்டூன் கேலரி